Tuesday 5 November 2013

எத்தனை காதல் கொண்டாயோ?


மாலவன் விரல்தனை
பற்றி கொண்டே,
வேதங்கள் துலவும்
மூலவன் பாதம் பற்றி
மாலை கொண்டாயே
இமையவன் ஒரு பாகம் கொண்டாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

அவன் கையிலும் தீ
மெய்யிலும் தீ
கண்ணிலும் தீ
சாரதி தங்கையே
தீயோருக்கெல்லாம்
தீ என்பதால்
திருமணம் கொண்டாயோ?
 உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

ஞானம் அறியாதோர்
மட்டும்
அறிதலுக்குரிய
அரியவன்.
ஆயர்பாடி
அரி அவன் இளையோளே
திகழ் ஒளி சிதம்பரத்தான்
அகம் நுழைந்தாளே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

மூவரில் மேலவன்
கங்கையோ
தலைமேலவன்.
மாயவன் சோதரி
மாயங்கள் செய்து
தூயவன் துணையானாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

Wednesday 11 September 2013

பாரதி காலமாகி போன நாள் இன்று.

தான் வாழ்ந்த காலத்தில் தான் வாழும் சமூகத்தை, மக்களை, மொழியை, தன் தேசத்தை தன் தோளில் ஏற்றி எவன் ஒருவன் உயர்த்துகிறானோ, அல்லது உயர்த்த எத்தனிக்கிறானோ அவனே கவிஞன்.
ஆம் அப்படி பட்ட தேசியக்கவிஞன் தான்,
நமது முரட்டு முண்டாசு கவிஞன்.

கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை தன் கடற்கரை உரையின் மூலம் வியர்க்க வைத்து அனுப்பியவன் அவன்.
நரம்புகளின் ஊடாக சுதந்திர எண்ணத்தை திணித்து, தோள்களை திணவுற செய்த நெருப்பு கவிஞன் அவன்.

வெள்ளையருக்கு எதிராய் அவன் வெடிகுண்டுகளை பயன் படுத்தவில்லை. ஆனாலும் அவன் கந்தக கவிதைகள் அவர்களை காயப்படுத்தியதோ என்னவோ? அவனை வெள்ளையர்கள் தீவீர வாதியாய் கருதினர்.

ஆம்,
அவன் வாழ்ந்து இருந்த பூமியில் நாமெல்லாம் வாழ வாய்ப்பு கிடைத்ததற்க்காக நன்றி சொல்வோம்.

அவனுக்கு சாவே இல்லை. சாகாதவனுக்கு இன்று நினைவு நாள்.

”நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!”
-பாரதி.

Wednesday 17 July 2013

காதலோடு கதைத்த பொழுதில்...

அவன்:

கார்முகில்
அருளும் முதல் துளியோ?
மழை புணர்ந்ததும்
மண் உமிழும் புது மணமோ?
வைகறை பூப்படைந்த
புதுமலரோ?
கவிதைக்குள் சூழ் கொண்ட
தமிழ் சுவையோ?
அவள் யாரோ? அது நீயோ?

அவள்:

என் துகிலினுள் நுழைந்து
தழுவும் மென்காற்றோ?
என் கனவுகள் களிகொள்ளும்
எண்ண வண்ணங்களோ?
என் கொலுசுக்குள் சிணுங்கும்
வெட்கச் சிம்பொனியொ?
அவன் யாரோ? அது நீயோ?

Wednesday 27 March 2013

வர்ணத்தால் பேதமில்லை!



குதூகலமான நாட்களை
குறிப்பிடச் சொன்னால்
இந்த நாளையும் சேர்த்தே சொல்வேன் .
மாநிலங்கள்
வேறு வேறு
மொழி
வேறு வேறு
மதம்
வேறு வேறு
இவ்வளவு ஏன்
முகவரியாய் முகம்
அன்றி வேறு ஒன்றும்
தெரியாது.
நாங்கள் வேறு பட்டு இருந்தோம்
ஆனாலும் கள்ளமற்ற
அதீத அன்பால்
உள்ளத்தின்
வேரு தொட்டே இருந்தோம்.
வர்ணங்கள் பேதமே
காட்சிக்கு ,
ஆனால் வர்ணங்கள் ஒன்றிணைத்து
எங்கள் அனைவரையும்.
மகிழ்ச்சியின்
உச்சத்தை
மிச்சமே இல்லாமல்
தொட வைத்தது.
இன்று மிக கோலாகல
ஹோலி திருவிழா என்
பல்கலைகழகத்தில்.
Back to top

Saturday 16 March 2013

எம் உறவுகளே உங்களோடு கதைப்பது நான் அல்ல என் மனமே

என் இனிய உறவுகளே !

மானுட அநீதிக்காக குரல் கொடுக்கும் சுய நலமற்ற, உண்மைக்காக
போராடும் போர் முரசுகளே!
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உங்களை சூழ்ச்சிகளால் உங்களை தோற்கடிக்க பல வழிகள் செய்யப்படலாம், ஆனாலும்
"எண்ணித்துணிக கருமம்.............."
"கருதிய எண்ணம் நிறைவேறும் வரை உழைமின் உழைமின் ............"

எதோ மனித உரிமை மீறப்பட்டதாக, இலங்கை மீது குற்றம் சாற்றி கொண்டு இருக்கிறோம், அது தவறு. காரணம் அது மனித உரிமை மீறல் அல்லவே அல்ல. திட்டமிட்டு மிக தெளிவோடு செய்யப்பட்ட இன படுகொலை.
ஒரு இனப்படுகொலை ஒன்றை , எதோ மனித உரிமை மீறல் என்று சிறிதாக மாற்றி  விட வேண்டாம். கொலை வேறு உரிமை மீறல் வேறு .

மேலும் இதை தமிழர் பிரச்சனை என அடையாளப்படுத்தி இதை ஒரு மொழி பேசும் பிரச்சனை என திசை மாற்றும் அரசியல் சூத்திரதாரிகள் இங்கு பல உண்டு. ஆம் இது மானுடத்திற்கு எதிரானது. இந்த வெறி நாய் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக இருப்பது தமிழன்.  இன வெறி கொண்ட விலங்குகள் , அப்பாவி மக்களை தாக்குதல் நடத்தியுள்ளது,
நண்பர்களே இனி நாற்காலி ஆசை கொண்ட அசடர்கள் உங்களை பகடை ஆக்க முயற்சி செய்யும் கவனம் தேவை.தன் வார்த்தை ஜாலத்தால் வலை விரிக்கும் விவேகம் அவசியம்.

தயவு  செய்து உங்கள் போராட்டம் மானுடத்திற்காக என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டியது உங்கள்  கடமை, உங்கள் போராட்டம் வெறிகொண்டு தாக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு என்பதை உணர்த்துங்கள்.
"பழங்கதைகள் நமக்குள்ளே பேசுவதிலோர் அர்த்தமில்லை"
உங்களின் அறப்போராட்டத்தை இந்திய மாணவர்கள் அத்துனை பேருக்கும் புரிய வைத்து ஆதரவு திரட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

உறவுகளே நமக்குள் பேதம் இல்லை. அன்பால் மட்டுமே அனைவரும் பிணைந்து இருக்கிறோம். "ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே..."

உங்கள் உடல் பட்டினியால் துவண்டு போகலாம்
உள்ளம் உலை போல் கொதிக்கிறது.
கவலை வேண்டாம் திறந்த வெளி சிறையில் பசியால் செத்து மடிந்த
உறவுகள் போல இனியாரும் பட்டினியால் சாக கூடாது என்பதற்காக.
தோழிகளே நீங்கள் வெயிலில், பசியில் துயர் படுவது புரிகிறது,
ஈழத்தில் இனி ஒரு சகோதரியும் சிங்கள வெறி கொண்ட நாய்களுக்கு
இரையாக கூடாது என்பதற்காக.
கல்லூரி வாசலில் மானுட நீதிக்கு குரல் கொடுக்கும்,
என் பிரிய உறவுகளே
இலங்கை  தேசத்தில் பலரும் ரண வேதனையில் துடிக்கும் ஓசை
இனி கேட்க கூடாது என்பதற்காக.

ரோம் பற்றி எரியும் போது பீடில் வாசித்த நீரோ வின் நினைவு வருகிறது
இன்றைய மத்திய அரசின் நிலை.

அரசே எம் மாணவர் சமூகத்தை

"இலவு
காத்த கிளி என்றும் மட்டும்
எண்ணி விட வேண்டாம்
நாங்கள்
தலையணை தயாரிக்கும்
தந்திரம் புரிந்தவர்கள் "

Thursday 14 February 2013

காதல் ரசவாதம்-காதலர் தின பதிவு



சில குறிப்புகள்:
காதல் பற்றிய விருப்ப சிந்தனை இல்லாதவர்கள் வாசிக்க வேண்டாம். இது உங்களை காதலின்பால் உங்களை, உங்களை அறியாமலேயே ஈர்க்கலாம்.
                    
                    விநோதங்களின்  வித்தியாச ரசவாதம், கண் கட்டி வித்தைகளின் உச்சம். இதில் மட்டும்தான் ஜாலம் செய்யும் மாயாஜாலக்காரன் கூட மாயங்களில் மயங்கிவிடுகிறான். புரிந்து கொள்ள முடியாத புதிர்களின் தொகுப்பு. நம்மை அறியாமலே நமக்குள் நடக்கும் ஹார்மோன் கலவரம், நாமையே மறந்துவிட செய்யும் அதுதான் அப்போதைய நிலவரம். ராட்டினத்தின் உச்சியில் இருந்து வேகமாக கிழிறங்கும் போது ஏற்படுமே அடிவாயிற்று சுக வலி. அதுபோலத்தான் இந்த காதலும்.

                  ஒரு திறந்த மடல்
                      
                   அனைவரின் முன்னிலையிலும், ஆனால் யாருக்கும் தெரியாமலும் உன் இதழ்களின் ஓரமாய் ஒரு சிறு புன்னகை உதித்து மறையுமே சிறு மின்னல் போல. அது செய்யும் ஜாலத்தில் துவங்கியதுதான் இது.
                     
                    எந்த வார்த்தைகளும் அழகே இல்லை உண்மையில் , ஆனால் உன்னைப்பற்றி பேசிய வார்த்தை அத்தனையும் அழகாக மட்டுமே இருக்கிறது. உன்னை பற்றி எழுதும் போது மட்டுமே என் கனவுகளும் நனவுகளும் நித்தம் நித்தம் நல்ல நல்ல வண்ணம் பூசிக்கொள்கிறது.  பேனா தூரிகை ஆகிப்போகிறது. மிக நல்ல கவிஞன்தான் உன்னை காணும்வரை. இப்போது எல்லாம் கவிஞன் என வெளியில் சொல்லிக்கொள்ளவே வெட்கமாய் இருக்கிறது. காரணம் உனக்கு மட்டும் ஒப்புமை, உவமை கூறமுடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன்.

                    எதை உனக்கு ஒப்புமை கூற நினைத்தாலும் நீ அதைவிட அழகாகவே தெரிகிறாய். அவ்வளவு தூரம் உன்னால் காதல் பசலை கொண்டு திரிகிறேன். மேலும் மேலும் அழகு கூடாதே, காரணம் அழகு என்ற சொல்லின் பொருளை விட நீ அழகானால் என்னால் தமிழில் வேறு வார்த்தைகள் எல்லாம் தேடமுடியாது.

                    கந்தர்வ கன்னிகள் தன் இருப்பிலேயே காதல்  இசையை கசியவிட்டு கவர்ந்து விடுவார்களாம். உன் இருப்பில் அதையே நான் உணர்கிறேன். பொறியியல் படித்தும் நீ உன் கண்களில் பொறிவைத்து எனை அகப்படுத்திய விஞ்ஞானம் விளங்கவேயில்லை.
எனக்கு அணு இயற்பியல் புரிகிறது, வேதிவினைகள் புரிகிறது, சார்பியல் தத்துவம் புரிகிறது,
பிளாங் மாறிலி புரிகிறது, பிக் பெங் தியரி புரிகிறது, அவ்வளவு ஏன் கடின கணிதம் கூட புரிகிறது. ஆனால் உன் முகத்தின் பாவங்களின் அர்த்தங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியவே இல்லை.

                      மிக சிறிய அலைநீளத்தை அளக்க கூட ஆங்ஸ்ட்ரோம்  என்ற அலகு உள்ளதாம். என் விஞ்ஞானிகளே அவள் சிறு கண்களால் என் மனதை அலைகழிக்கும் நீளத்தை அளக்க ஏதேனும் அலகு வேண்டும் அதுவும் அழகாக!

                    நீ என்ன சொன்னாலும் கேட்கிறேனடி ஆனால் என் கனவில் நீ செய்யும் சில்மிஷங்களை மட்டும் சிறிதாவது குறைத்துக்கொள்.
                   எத்தனை தூரம் போனாலும், பல மாநிலம் கடந்து இருந்த போதும், முகவரிகூட இல்லாத போதும் நீ மட்டும் எப்படியோ கனவுகளுக்குள் வந்து விடுகிறாய் மெல்ல நுழைந்து.
கனவு முடிந்து நீ பத்திரமாக சென்று விடுவாயோ என்கிற பயத்திலேயே, நீ சென்ற பிறகும் தூக்கம் களைந்து கிடக்குறேன்.
                    இதையெல்லாம் பற்றி பகலில் பேசினால், உன் வெட்கம், செல்ல சிரிப்பு, மெல்லிய விளையாட்டு கோபம் கலந்து ஒரு காக்டெயில் தருவாயே , அது இன்னும் உன்மேல் போதை கொள்ளசெய்யும்.

                    எத்தனை ஜாலக்காரி நீ, வீட்டில் யாரும் உன்னருகில் இருக்கும் போது அலைபேசியில் அழைக்கும் போது உன் தோழியிடம் பேசுவது போல் நீ கொஞ்சி பேசி செய்யும் ஜாலம் எங்குதான் கற்றாயோ? இவ்வாறு நீ செய்யும் சமாளிப்பு நாடகங்கள் என்னுள் பல முறை வியப்பும், பல முறை சிரிப்பும் வர வைத்து இருக்கிறது.

                  உன்னை இதய களவாடி என நான் அழைக்கும் போதெல்லாம், "இது என்னுடையது, இதை எடுத்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவை இல்லை "என சொல்லி கன்னம் தடவினாயே அதற்காகவாவது சொல்வேன் நீ காதல் களவாடி என.
                 
                   காதல் பசலையில் பித்து பிடித்து இருந்த நாட்களில், எதோ ஒரு திருமண விழாவில் சந்திக்க நேர்ந்த பொழுதில், என் அறைக்கு வந்து எதோ தேடுவது போல் யாரும் அறியாமல் இருக்க அணைத்து காதுகள் அருகே மிக நெருக்கமாய் வந்து உன் மெல்லிய குரலில் "நீ சொன்னாய் நீ காதல் பித்தன் அல்ல. எனை கச்சிதமாய் உன் காதல் சித்தில் பினைத்திட்ட சித்தன் என "
 இப்போதும் புரிகிறது இது கூட அவள் காதல் செய்யும்  ரசவாதம் என. இல்லை அவள் சொன்னது உண்மைதானோ ?