Saturday 15 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-2. உங்களின் நினைவுகளோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம்

கடற்கரை பகுதியின் ஓரமாய் ஒதுங்கி கிடக்கும் கிளிஞ்சல்கள் போல நம் மனதின் ஓரமாய் ஒதுங்கி விடுகிறது சில நினைவுகள் . நம் தமிழ் சமூகத்தில் ஆண்  பெண்  உறவு ஒரு பாலியல் சார்ந்த உறவாகவே சித்தரிக்கப்படுகிறது , இது தற்கால நிகழ்வுதானே தவிர ஆதிமுதல் நாம் இப்படி இல்லை.
நிறைய இலக்கிய கதைகளில் ஆண் பெண் உறவு நட்பாகவே கருதப்பட்டு உயர்வு செய்து இருக்கின்றனர். ஒரு மாலை பொழுதில் கடற்கரையில் அமர்ந்து கடல் அலை பார்த்து கொண்டு இருந்த நேரம், மனதின் மடிப்புகளில் படிந்து போன ஒரு கவிதை சட்டென பளிச்சிட்டது. வேகமான ரயில் பயணத்தில் ஜன்னல் ஒர காட்சி போல, அந்த கவிதை,

நீயும் நானும்
நடந்து போகுகையில்
எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும் 
நம்மை நண்பர்களாகவே
பார்க்கும் பாக்கியம்.
                                                  -அறிவுமதி
ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போகும் போது, விரச கண்ணாடி  மனதிற்கு அணிவிக்காமல்
பார்க்கும் எத்தனை பேர் நம்மில் உண்டு. நல்ல பெண் தோழி மட்டும் கிடைப்பின் அவனின் வாழ்வில்  விரச விஷயங்கள் தீண்டாமல்
அவனால் வாழ முடியும். ஆம் ஒரு புனிதமான பெண் தோழியின் நட்பு என்பது மற்றொரு தொப்புள் கொடி உறவே. ஒரு தாய்மை உணர வாய்ப்பு
உண்டு. ஆனால் இதில் சில விதிவிலக்காக விபரீதங்களும் வந்து விடலாம். ஆனால் விதிவிலக்குகள் எல்லாம் உதாரணங்கள் அல்லவே. நாம் புனிதம்
பார்த்து பழக்கப்படுவோம். பெண்களின் குடும்பத்தில் ஒருவேளை மாற்றுகருத்து இருப்பின், அவள் யாரோடு பேசினாலும் அவளின் பெற்றோர் மனதில் நம்பிக்கை அற்ற எண்ணம் தோன்றும் எனில் அவள் சுயம் அதிகம் ஒடுக்கப்பட்டு விடும். அப்படித்தான் ஆண் பையனின் குடும்பத்திலும்.
இவ்வாறு அதீத ஒடுக்கு முறையால் சில நேரங்களில் மன தடுமாற்றம்  கொண்டு பிழைகள் நிகழ்ந்து விடுகிறது.
பொதுவில் எல்லா பெண்ணிற்கும் தன் தந்தை மீது ஒரு பகுக்க முடியாதா பிணைப்பு உண்டு. அதே போல் ஆணிற்கும் தன் அம்மாவின் மீது அப்படி ஒரு பந்தம்
இருக்கவே செய்யும்.
                 இதுவே ஆண் பெண் நட்பையும், பெண் ஆண் நட்பையும் தேடும் ஆதார புள்ளி. நல்ல நட்போடு பழகும் அப்பா தன் மகள் தேடும் நண்பன் சரியானவனா
அவன் இவளிடம் பழகும் போது நட்பு மட்டுமே எதிர்பார்க்கபடுகிறதா அவனால் என்பதை மிக கவனத்தோடு அணுகி, சரி எனில் அவர்கள் நட்பை அங்கீகரித்தும், தவறு எனில் மகளுக்கு புரியும் வண்ணம், வயதில் மூத்தவன் இந்த உலகில் நிறைய தனக்கு தெரியும் என்ற ஈகோ உணர்வு இல்லாமல் அவளோடு நட்பின் தொடுதலோடு சொன்னால் எந்த பெண்ணாலும் மறுக்க முடியாது. இது போன்று இருப்பின் வாழ்க்கை  துணை தேடும் பொழுதிலும், பருவ மாற்ற நிகழ்விலும்
அவளால் மிக தெளிவோடும், தமிழ் பண்பாட்டின் கண்ணியம் குறையாமலும் வாழ இயலும்.
அதுபோல ஆண் பையனின் வீட்டில் இருப்பின் அவன் தேவையற்ற கவன சிதறலால் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் தவிர்க்கப்படும். மிக சரியான பெண் தோழி கொண்ட ஒருவனால் சாலையின் ஓரம்  நின்று பெண்களை சீண்டும் பொறுக்கியாக இருக்கவே முடியாது. அவன் மனதில் அந்த எண்ணம் தோணும் பொழுதில் அவனை தலை தட்டி தடுமாறாமல் தாங்கி பிடிக்கும் பொறுப்பு அந்த தோழிக்கு கடமையாகிவிடும், அவனை சரி செய்யும் பணி அவளுடயதாகும்.
இயல்பில் ஒரு ஆண் நண்பனின் வார்த்தைகளின் மதிப்பை விட பெண் நட்பின் வார்த்தைகளின் மதிப்பு அதிகமே. எந்த தாய்க்கும் , தந்தைக்கும் தன் மகனை  சாலையோர பொறுக்கியாக பார்க்க வேண்டும் எனும் விருப்பம் இருக்காது.
        
              எந்த பெற்றோருக்கும் நல்ல நட்பின் மீது எதிர்ப்பே இல்லை காதலை கூட எதிர்ப்பவர்கள் உண்டு நட்பை எதிர்க்கும் பெற்றோர் உலகில் இல்லவே இல்லை. முதலில் பெண்ணோ ஆணோ தான் தன் பெற்றோரின் மன  எல்லை மீறி போய் விட மாட்டோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பின் யாரும் எதிர்ப்பு சொல்வதில்லை. மேலும் அவர்களின் வழிகாட்டுதலை உதாசினப்படுத்தாமல் இருப்பின் நன்மை பயக்கும்.
எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் மகிழ்ச்சியற்று வாழ வேண்டும் என நினைப்பதில்லை.

      ஆண் பெண் நட்பில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எந்த உறவிலும் உணர இயலாது. மேலும் சின்ன சின்ன சண்டைகள், கருத்து வேறுபாடுகள் , மற்றும் சில அழுகை, சில வருத்தம், சில மகிழ்ச்சி பொழுது, ...... இவையெல்லாம் உணர்தலின் சுகம் வித்தியாசமானது.
ஒரு காபி குடித்து முடித்தும் சில நிமிடம் அந்த சுவை நாவு விட்டு செல்லாமல் இருப்பது போல ஒரு கவிதை வாசித்து முடித்த போதும், இன்னும் சுவை போகாமல் நீடிக்கிறது,
காதலனின்
பார்வையில் உள்ளபோது
நான் என் ஆடைகளை
நொடிக்கொருமுறை சரியாக
உள்ளனவா என
கவனித்து சீர் செய்தேன்,
அனால் உன்னோடு
இருக்கும் பொழுது
தாய்மையோடு இருப்பதை
உணர்ந்தேன்.
கவலையற்று.

காரணம் என் தாயின் விழிகளின்
வழியாக பார்ப்பதால்.
                 இளம் நிலை கல்லூரி படிக்கும் போது ஒரு தோழி தான் ஒரு சில புத்தகம் வாங்க வேண்டும் என்றும் தன்னோடு புத்தக கடைக்கு வர சொல்லி அழைத்து இருவரும் நடந்து செல்கையில், எது எதோ பேசிக்கொண்டு வரும் போது , அவளாகவே சொன்னால் "என் காதலனோடு நடக்கையில் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் முகம் மறைத்து ,சிரித்தால் யாரும் அசிங்கமாக நினைப்பார்களோ என்ற  ஒரு பய உணர்வோடு மட்டுமே செல்வேன், ஆனால் உன்னோடு நான் நடக்கும் போது யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் இன்றி, சத்தமாக சிரித்தால் யாரும் தவறாக நினைப்பார்களோ என்ற அச்சமின்றி
மிகவும் சந்தோசமாக இருக்கிறேன், என்னை நானாக இருக்க வைத்தது உன் பிரண்ட்ஷிப் , தேங்க்ஸ் டா" இந்த வசனம் இன்னும் மனம் விட்டு மறையவே இல்லை . மேலும் அவளின் நட்பு அதன் பிறகு கால மாற்றத்தால் தொடர முடியாமல் போனபோதும், பல ஆண்டுகள் கடந்த போதும் அவளை அதன் பிறகு  வாய்ப்பு இல்லாமல் போனபோதும் , முகமும் முகவரியும் மறந்த போதும் அவளின் இந்த வாக்கியங்கள், ஆயிரம் வெள்ளங்கள்  கடந்தாலும் மண்ணில் பதிந்த  கூழான் கற்களை போல் அழகாய் அமிழ்ந்து மனதில் ஒட்டிவிட்டது.

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் , பேசிக்கொண்டே இருக்கிறது மென்மையாய் மனதிற்கு சுகமாய் .....
    



Sunday 9 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -1

என்றைக்காவது எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை கவனித்து இருக்கிறீர்களா?
எங்கு துவங்கியது? எங்கு சென்று கொண்டு இருக்கிறது?  என்பதை பற்றி நினைத்து பார்த்தது
உண்டா?  வாழ்வில் பல சிறிய விஷயங்களை நாம் கவனிப்பதேயில்லை.
வாழ்வின் நினைவுகளும் அப்படித்தான் பல நேரங்களில் எங்கு துவங்குகிறது? எங்கு செல்கிறது?
என்பது பற்றிய பிரக்ஞை இருப்பதே இல்லை. இந்த வார்த்தைகள் பலரும் கேட்டிருக்க கூடும் "எதோ நினச்சுட்டு இருந்தேன்"
ஆம் , பலரும் தன் நினைவுகளின் ஓடையை ரசிப்பதே இல்லை. நம் மனதின் நினைவுகளையும் பதிவுகளையும் வாசிப்போம்.
பல நினைவுகளை பலரும் சொல்லிக்கொண்டே இருப்பதை காண முடியும்,குறிப்பாக வயதானவர்கள் தன் கடந்த கால நினைவுகளை பற்றி சொல்லும் போதும், பிறரின் நினைவுகளை கேட்கும் போதும்  ஒரு அயர்ச்சி இருக்கவே செய்கிறது.
பல வயதானவர்களின் ஆழ்ந்த வருத்தமே தான் மனம் விட்டு பேச இயலவில்லை என்பதாகவே இருக்கிறது.
பலரும் நம் விசயங்களை நம் வீட்டு வயதனவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை.
நாம் சொல்லும் காரணம் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே.
இயல்பாக இதே வசனத்தை நம் வீட்டு முதியவர்களும் அவர்களின் மூத்தவர்களிடம் சொன்னதே!
ஆம் அதே போன்று நாமும் ஒரு நாள் கேட்போம் "உங்களுக்கு இதெல்லாம் புரியாது, சும்மா இருங்க " .

ஒருமுறை ஒரு ஆசிரமத்தில் ஒரு தியான பயிற்சிக்காக சென்ற போது, ஒரு முதியவர் வேறு ஒரு பயிற்சிக்காக வந்து இருந்தார்.
மாலை பொழுதில் அவரோடு பேசும் போது அவராக விசாரித்து பேச துவங்கினார், சுய விபரமளிக்கும் கட்டம் கடந்த போது, அவராகவே
சொன்னார், எனக்கு ஒன்னும் குறையில்லை , என் மகன் ,மருமகள் இருவரும் வங்கியிலும், தனியார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர்.
நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், எனக்கு பணம் பற்றி கவலையே இல்லை. நிறைவாக வாழ்கிறேன் என்று சொல்லி சிறிய மௌன இடைவெளிக்கு பின்
இப்போது கூட தன் மகன் காரில் வந்து இறக்கிவிட்டு சென்றதாக சொன்னார். ஆனாலும் தன் பேச்சில் ஒரு துயர தொனி கொண்டே இருந்தார்.
மீண்டும் கொஞ்சம் மௌனம் தீர்ந்து வார்த்தைகளோடு சில துளி கண்ணீர் நிரப்பி சொன்னார். ஆனாலும் " நான் வீட்டில் ஒரு மௌன விரதம் மேற்கொண்டவன் போல் வாழ்கிறேன் என்று சொல்லி விட்டு  கண்ணீர் துடைத்து சொன்னார். ஆம் என் மகனும் , மருமகளும் காலையில் அவசர அவசரமாக வேலைக்கு சென்று
விட்டு மாலை அதீத களைப்பில் வந்து அறைக்கு சென்று அயர்ந்து விடுவார்கள். அவர்கள் என்னிடம் பேசும் வார்த்தைகள், என் மருமகள் "மாமா, டேபிளில் சாப்பாடு இருக்கு, பிளஸ்கில் காபி இருக்கு, கதவ நல்லா லாக் பண்ணிக்கங்க, நல்ல ரெஸ்ட் எடுங்க", என் மகனோ "அப்பா,  எதுவும் தபால் வந்த மறக்காம என் டேபிள் மேல வாங்கி வச்சிடுங்க?" மாலையில்  "என்னப்பா சாப்டிங்களா?, எதுவும் போன்,தபால் வந்ததா?" ,"வாங்க டின்னர் சாப்பிடலாம்"  இதுவே  தான் கேட்கும் வார்த்தைகள் மற்றும் உரையாடல்.
என சொல்லி விட்டு, ஆனாலும் எனக்கு ஒரு குறையும் இல்லை நான் நல்ல இருக்கிறேன்  என்று மீண்டும் சொல்லி சொன்னார், பாவம் அவர்கள் மீது குற்றம் இல்லை அவர்களின் வேலை பளு அதிகம் அதுதான் காரணம் என தானே தன் மனதிற்கு ஒரு களிம்பு வார்த்தைகள் பூசிக்கொண்டார்.  பேசவேண்டும் என்ற காரணத்தில் உங்களுக்கு பேரன், பேத்தி என கேட்டபோது , முகம் மலர்ந்து அவரின் ஒரே பேரன் அவனும் டெல்லியில் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படிப்பதை பெருமையாக சொல்லிய போதும், அவனை பார்த்து பல மாதங்கள் ஆனதையும் சொல்லி வருந்தி, அவன் மிக திறமை சாலி  அசல் என்னை போலவே, நான் எப்படி சிறு வயதில் இருந்தேனோ அப்படியே இருக்கிறான் என சொல்லும் போது ஒரு துளி கண்ணீர் சிதறியது. நன்றி சொல்லி அவர் சென்றுவிட்ட பிறகும் நினைவுகளில் இருந்து அந்த கண்ணீர் காயவே இல்லை. தான்  கூட பேச யாரும் இல்லை என்ற நிலை, தான் பேசும் பேச்சை கேட்க யாரும் இல்லை என ஏங்கும்  மனிதர்களின் துயரம் உள்ளம் ஊடுருவக்கூடியது என்பதை உணரவே முடிகிறது.
"உலகில் விரும்பும் போது கிட்டாத தனிமையும், விரும்பாத போது தரப்பட்ட தனிமையும்
மரணத்தை விட கொடூரமானது தான்."


மௌனத்தோடு பேசிக்கொண்டே இருக்கிறது நினைவுகள் .............................

Friday 7 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்

நினைவுகள் பாறையின் இடுக்குகளில் கசிகின்ற நீர் போலத்தான் துளி துளியாய் கசிந்தே ஓடை யாகவே மாறிவிடுகிறது.
இந்த உலகில் யாருக்கும் தனக்குள் அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. ஆனால் தன் பகிர்கின்ற செய்தி ஒன்று கேளிக்கை ஆக்கப்பட்டு விடுமோ என்றோ, இல்லை திரித்து பலரிடம் சொல்லப்பட்டு விடுமோ என்றோ, இல்லை தன்னை தவறாக கணிக்க துவங்குவார்களோ, இல்லை தான் வளர்த்து வைத்திருக்கும் இந்த புறச்சூழ்நிலை அடையாளம் இழக்கும் நிலை வருமோ என்பதை தவிர வேறு எந்த காரணமும் இருக்காது. ஆனால் எல்லோரும் தன்னை பற்றி யாரிடமாவது வெளிப்படையாக பகிர மாட்டோமா என்கிற ஏக்கம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு நெருக்கமாக இருப்பினும் சில ரகசியங்கள் காக்கவே படுகிறது.
இருந்த போதும் தனக்கான ஒருவரிடம் தோள் சாய்ந்து எல்லாவற்றையும்  சொல்லி உள்ளீடு அற்று மாற மாட்டோமா என்கிற எண்ணம் இல்லாதவர் இல்லவே இல்லை.மகிழ்ச்சியின் போது மனம் இதுபோன்று சிந்திப்பதே இல்லை. அது  ஏனோ துயரங்களின் போது மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.
வெறுமை எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை, அதுவே அதன் வெற்றியும் கூட .
முழு நீள இசைக்கச்சேரியில் நினைவுக்கு வராமலே போகும் சிறு இசைக்கருவி போல பலரும் நம் கண்களுக்கு தெரியாமலே போய் விடுகிறார்கள் நம் வாழ்வில் . ஆனால் சிறு நத்தை போல அவர்கள் மனதில் அது மெல்ல மெல்ல நகர்ந்து முழு நீளத்தையும் கடந்தே விடுகிறது நமக்கு தெரியாமலேயே.
நினைவுகளின் ஓடையிலே மனம் செல்கிறது ஆற்றின் பயணத்தில் விழுந்த இலை போல  எங்கு செல்லுமோ...