Sunday 14 August 2011

வாழ்க பாரதம்!

                 இருட்டகத்தான்
                 இருந்தது
                 அன்றய
                 இரவும்,
                 ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
                 "உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
                  ஆம்,
                  சிலர் சொல்லி அனுப்பியதாக  சொல்லின
                  சில கதர் சட்டைகள்.
                   நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
                   இரவின் மைய இருள் நகர்ந்த பின்
                    ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர்    
                    மூலம்,
                   சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
                   குதுகளித்தோம் "சுதந்திரம்  
                    கிடைத்துவிட்டது என்று".
                    இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி 
                  இனிப்பு தரும் தாத்தா.
                  இப்போதெல்லாம் இதை
                  அந்த தாத்தா சொல்வதே இல்லை.
                  தான்  தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 
                  செலவானதில் 
                  இருந்து.
                 
              

என் பிரிய தோழமைகளே!
                  ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
                  வாழ்க பாரதம்!
                  வந்தேமாதரம்.
                  ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.

Wednesday 10 August 2011

அவள் கொஞ்சம் தேவதை

தோழமைக்கு,
[அழகான முகத்தில் பாதிக்கு மேல் தீயால் எரிந்து போன ஒரு தேவதை பெண்ணை பார்த்த பொது என்னுள் எழுந்த கவி]
முகவரியாய்
உனைப்பற்றி ஒருவரியும் தெரியாது.
அரிபறியை எனை கடந்து போனாலும்
பிறை கொண்ட நிலவாய்
என் மனம் விட்டு மறையாது
உன் முகம்.
எது பற்றியும் அறியவில்லை
எது உறவானாலும்  பரவாயில்லை.
என் மனம் விட்டு ஒரு நொடியும்
நீ மட்டும் மறைவதில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய்
நெஞ்சம் புகுந்து
வஞ்சமே இல்லாமல் ஊடுருவிப் போனவள்
பஞ்சாய் பறக்கவைத்தாள்
நெஞ்சத்து நினைவுகளை !
பாரங்கல்லாய் அமர்ந்து போனாய்
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்.
ஆம் அவள் கொஞ்சம் தேவதை தான்.
விழியோரத்து கண்ணீர் துளியுடன்
அவளுக்காய் பிரார்த்தனை மட்டும் நொடிக்கொருமுறை
மாறுமோ அவள் முகம்
இனி வாழ்விலே ஒரே ஒரு முறை !
அவள் கொஞ்சம் தேவதை.....

Monday 8 August 2011

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

தோழமைக்கு,
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க  30,000 கோடி தேவை படுகிறது எனும்  போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
                      மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.
            மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.
          என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.
          உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.
           WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.
           ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது  என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.
நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.

Saturday 6 August 2011

பிளீஸ் படிக்கதிங்க, ரொம்ப சங்கடமாக இருக்கு.

தோழமைக்கு,
                 இன்று ஒரு பிரபல செய்தி தாள் ஒன்றில் ஒரு வாசித்தது, ஒரு காலத்தில் பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் காதல் என்ற பெயரில் சில அநாகரீக செயல் நடப்பதுண்டு அவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு செல்லும் இளம் வயதினர் அல்லது கல்லூரி செல்லும் இளம் வயதினரை இருக்க கூடும்.
                  ஆனால் இன்று அதிகம் பள்ளி மாணவர்களே! மேலும் அவர்கள் சொல்லவே அநாகரீகமாக இருக்கும் அளவில் தவறுகளை பீச் மற்றும் பார்க் போன்ற இடங்களில் செய்வது உண்மையில் மனம் குமுற வைக்கிறது. காவல் துறையினர், அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தும் பலன் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் இது இருவரும் வேலைக்கு செல்லும் தம்பதியினர் வீட்டு பிள்ளைகளே அதிகம் இதுபோன்ற நிலையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பொருளாதார சுழலுக்காக இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் தன் குழந்தைகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
                   ஒரு ஆய்வறிக்கை படி டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை இவற்றில் உள்ள பள்ளி மாணவர்களில் அதிகம் கருத்தடை செய்து கொண்டவர்களில் சென்னை தான் முதலில் இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இது கடந்த கல்வி ஆண்டில் 2 லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.
                   உண்மையில் ஒரு பக்கம் பயமும் மற்றொரு பக்கம் இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றும் தோணுகிறது. இது கலாசார சீர்கேடு அடைந்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது. இதற்கு போலீசார் தெரிவிக்கும் கருத்து, இளம் வயதினரிடம் ஆதிகமாக பரவி வரும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் ஆகிய செல்போன் , ஐ-பாட் , மெமரி கார்ட் மற்றும் சில இணைய தொழில் நுட்பங்களே என்கிறார்கள்.
                     இவை எல்லாம் நன்மை பயக்கும் என்றால் தீமையே மிக அதிகமாக உள்ளது. சரியான தீர்வு கட்டாயம் காண வேண்டும் மேலும் அது விரைவில் சரி செய்யும் அளவு இருத்தல் மிக அவசியம்.
குறிப்பு:
          சில நாட்களுக்கு முன் "நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்ற தலைப்பில் ஒரு பதிவை இதே பிரச்சனை சார்பாக பதிவு செய்து இருக்கிறேன். என் மன நிலையில் நம் இளம் தலை முறையினர் நம் கண் முன்னால் சீரழிவது மனதில்  சொல்ல இயலா வருத்தத்தை அளிக்கிறது.
நல்ல தீர்வு தேடி ஏக்கத்துடன் காத்திருப்பதை தவிர வழியின்றி இருக்கிறோம்.
               

Friday 5 August 2011

கங்கை - ஒரு துயரம்

என் இனிய தோழர்களே !
             இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
                "கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
                 இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
                 சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
                 இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
               இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
               கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
               இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
               கங்கை மட்டும் அல்ல  தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
                " இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
                  ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.

Thursday 4 August 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே !

என் இனிய நண்பர்களே,
                      சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் கீழ் கண்ட வழக்குகளின் எண்ணிக்கை 2500  (மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மட்டும்). அவை யாவன ,
1 .பெண் கடத்தல்,
2 .பள்ளி ஆசிரிய மாணவர் கள்ள தொடர்பு மற்றும் மாணவியுடன் அல்லது மாணவருடன் ஆசிரியர் காணமல் போனது.
3 .கல்லூரியிலும் இதே போல்...
4 .பிறன் மனை நோக்குதல் தொடர்பு.
மற்றும் வருத்த தரும் செயலான  5 .  பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை களுக்கு பலியாதல்.
இதை கேட்ட பொழுதில் நெஞ்சம் நிறைய வருத்தம் இருந்தது. பண்பாட்டில் பல் ஆயிர வருட பழமை கொண்ட தமிழ் மண்ணில், இதை விட தமிழனுக்கு
வேறு இழுக்கு வேண்டியதில்லை. வருகின்ற இளம் தலைமுறைகளுக்கு ஏன் இந்த பெருமை மிகு பண்பாடு புரிய வைக்கப் படவில்லை. இதற்கான முழு பொறுப்பும் நம்மை மட்டுமே சாரும். படித்த ஆசிரியர்களும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதே மனதை காயப்படுத்துகிறது.அவர்கள் கற்ற கல்வி பயனற்று போகிறது, நோக்கமும் சீர்கெட்டு விடுகிறது. நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். அதிக உயர்வாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தன்னிலை உணர வேண்டாமா ?.
பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு ஒழுக்க நிலை புரிய வைத்து வளர்த்தல் என்பது கடமை ஆகாதா? இளம் வயதிலேயே செல்போன் போன்ற ஊடகங்கள் இந்த இளம் வயதினரை எளிமையாக தவறான வழிக்கு வழிநடத்துகிறது.இது போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்களே வாங்கி கொடுத்து
தவறுக்கு பிள்ளையார் சுழி இடுகின்றனர். தன் பிள்ளைகளுக்கு தன் விருப்பம் போல் எதையும் வாங்கி தரலாம் ஆனால் அதன் விளைவுகள் பெற்றோரை மட்டுமே மனவருந்த செய்கிறது.நல் வழிகளுக்கும் செல் போன் பயன் படுகிறது, சில நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வசதியாக உள்ளது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் தான்.
      இதில் மேலும் பல கௌரவ தற்கொலை கூட நடந்து விடுகிறது. தன் வியாபார வளர்ச்சி மட்டுமே கருத்தில் கொண்டு  ஊடகங்கள் செய்திகளை அசிங்கமாக அம்பலப்படுத்தும் நிலையும் கூட இந்த தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மேலும் மைனர்  பெண்களுடன் காணமல் போகும் சிலர் அந்த பெண் மேஜர் ஆகும் வரை தலைமறைவாக இருந்து பின் வெளி வருகின்றனர். அதற்குள் அந்த பெண் சீரழிக்கப் படுகிறாள். பெண்மை போற்றும் தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலை குனிய வைக்கிறது.