Thursday, 14 February 2013

காதல் ரசவாதம்-காதலர் தின பதிவு



சில குறிப்புகள்:
காதல் பற்றிய விருப்ப சிந்தனை இல்லாதவர்கள் வாசிக்க வேண்டாம். இது உங்களை காதலின்பால் உங்களை, உங்களை அறியாமலேயே ஈர்க்கலாம்.
                    
                    விநோதங்களின்  வித்தியாச ரசவாதம், கண் கட்டி வித்தைகளின் உச்சம். இதில் மட்டும்தான் ஜாலம் செய்யும் மாயாஜாலக்காரன் கூட மாயங்களில் மயங்கிவிடுகிறான். புரிந்து கொள்ள முடியாத புதிர்களின் தொகுப்பு. நம்மை அறியாமலே நமக்குள் நடக்கும் ஹார்மோன் கலவரம், நாமையே மறந்துவிட செய்யும் அதுதான் அப்போதைய நிலவரம். ராட்டினத்தின் உச்சியில் இருந்து வேகமாக கிழிறங்கும் போது ஏற்படுமே அடிவாயிற்று சுக வலி. அதுபோலத்தான் இந்த காதலும்.

                  ஒரு திறந்த மடல்
                      
                   அனைவரின் முன்னிலையிலும், ஆனால் யாருக்கும் தெரியாமலும் உன் இதழ்களின் ஓரமாய் ஒரு சிறு புன்னகை உதித்து மறையுமே சிறு மின்னல் போல. அது செய்யும் ஜாலத்தில் துவங்கியதுதான் இது.
                     
                    எந்த வார்த்தைகளும் அழகே இல்லை உண்மையில் , ஆனால் உன்னைப்பற்றி பேசிய வார்த்தை அத்தனையும் அழகாக மட்டுமே இருக்கிறது. உன்னை பற்றி எழுதும் போது மட்டுமே என் கனவுகளும் நனவுகளும் நித்தம் நித்தம் நல்ல நல்ல வண்ணம் பூசிக்கொள்கிறது.  பேனா தூரிகை ஆகிப்போகிறது. மிக நல்ல கவிஞன்தான் உன்னை காணும்வரை. இப்போது எல்லாம் கவிஞன் என வெளியில் சொல்லிக்கொள்ளவே வெட்கமாய் இருக்கிறது. காரணம் உனக்கு மட்டும் ஒப்புமை, உவமை கூறமுடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன்.

                    எதை உனக்கு ஒப்புமை கூற நினைத்தாலும் நீ அதைவிட அழகாகவே தெரிகிறாய். அவ்வளவு தூரம் உன்னால் காதல் பசலை கொண்டு திரிகிறேன். மேலும் மேலும் அழகு கூடாதே, காரணம் அழகு என்ற சொல்லின் பொருளை விட நீ அழகானால் என்னால் தமிழில் வேறு வார்த்தைகள் எல்லாம் தேடமுடியாது.

                    கந்தர்வ கன்னிகள் தன் இருப்பிலேயே காதல்  இசையை கசியவிட்டு கவர்ந்து விடுவார்களாம். உன் இருப்பில் அதையே நான் உணர்கிறேன். பொறியியல் படித்தும் நீ உன் கண்களில் பொறிவைத்து எனை அகப்படுத்திய விஞ்ஞானம் விளங்கவேயில்லை.
எனக்கு அணு இயற்பியல் புரிகிறது, வேதிவினைகள் புரிகிறது, சார்பியல் தத்துவம் புரிகிறது,
பிளாங் மாறிலி புரிகிறது, பிக் பெங் தியரி புரிகிறது, அவ்வளவு ஏன் கடின கணிதம் கூட புரிகிறது. ஆனால் உன் முகத்தின் பாவங்களின் அர்த்தங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியவே இல்லை.

                      மிக சிறிய அலைநீளத்தை அளக்க கூட ஆங்ஸ்ட்ரோம்  என்ற அலகு உள்ளதாம். என் விஞ்ஞானிகளே அவள் சிறு கண்களால் என் மனதை அலைகழிக்கும் நீளத்தை அளக்க ஏதேனும் அலகு வேண்டும் அதுவும் அழகாக!

                    நீ என்ன சொன்னாலும் கேட்கிறேனடி ஆனால் என் கனவில் நீ செய்யும் சில்மிஷங்களை மட்டும் சிறிதாவது குறைத்துக்கொள்.
                   எத்தனை தூரம் போனாலும், பல மாநிலம் கடந்து இருந்த போதும், முகவரிகூட இல்லாத போதும் நீ மட்டும் எப்படியோ கனவுகளுக்குள் வந்து விடுகிறாய் மெல்ல நுழைந்து.
கனவு முடிந்து நீ பத்திரமாக சென்று விடுவாயோ என்கிற பயத்திலேயே, நீ சென்ற பிறகும் தூக்கம் களைந்து கிடக்குறேன்.
                    இதையெல்லாம் பற்றி பகலில் பேசினால், உன் வெட்கம், செல்ல சிரிப்பு, மெல்லிய விளையாட்டு கோபம் கலந்து ஒரு காக்டெயில் தருவாயே , அது இன்னும் உன்மேல் போதை கொள்ளசெய்யும்.

                    எத்தனை ஜாலக்காரி நீ, வீட்டில் யாரும் உன்னருகில் இருக்கும் போது அலைபேசியில் அழைக்கும் போது உன் தோழியிடம் பேசுவது போல் நீ கொஞ்சி பேசி செய்யும் ஜாலம் எங்குதான் கற்றாயோ? இவ்வாறு நீ செய்யும் சமாளிப்பு நாடகங்கள் என்னுள் பல முறை வியப்பும், பல முறை சிரிப்பும் வர வைத்து இருக்கிறது.

                  உன்னை இதய களவாடி என நான் அழைக்கும் போதெல்லாம், "இது என்னுடையது, இதை எடுத்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவை இல்லை "என சொல்லி கன்னம் தடவினாயே அதற்காகவாவது சொல்வேன் நீ காதல் களவாடி என.
                 
                   காதல் பசலையில் பித்து பிடித்து இருந்த நாட்களில், எதோ ஒரு திருமண விழாவில் சந்திக்க நேர்ந்த பொழுதில், என் அறைக்கு வந்து எதோ தேடுவது போல் யாரும் அறியாமல் இருக்க அணைத்து காதுகள் அருகே மிக நெருக்கமாய் வந்து உன் மெல்லிய குரலில் "நீ சொன்னாய் நீ காதல் பித்தன் அல்ல. எனை கச்சிதமாய் உன் காதல் சித்தில் பினைத்திட்ட சித்தன் என "
 இப்போதும் புரிகிறது இது கூட அவள் காதல் செய்யும்  ரசவாதம் என. இல்லை அவள் சொன்னது உண்மைதானோ ?


              




No comments:

Post a Comment