Wednesday, 21 May 2014

வண்ணத்துப்பூச்சிக்காக

நீங்கள்
என்னை கவனிக்காமல் இருக்கலாம்
அல்லது 
கவனிக்காதது போல் நடிக்கலாம்
அல்லது 
கவனித்தும் அஃறிணை போல கருதி கடந்து போகலாம்
அல்லது
கவனித்து விட்டு ஒரு ஏளனப்புன்னகை புரியலாம்
அல்லது
கவனித்து விட்டு என்னிடம் முட்டாள் என கூறிவிட்டு கூட செல்லலாம்
ஆனாலும்
கட்டுக்கடங்காமல் வரும் கண்ணீரை
கட்டுபடுத்த முடியாமல் அழுகிறேன்.
சாலையில் நசுக்கி கொல்லப்பட்ட 
வண்ணத்துப்பூச்சிக்காக...

Sunday, 26 January 2014

ஆண்டாளாய் என் மனது...

விலகாத விழிகொண்டு
உன்னுள் விழுந்திடச் செய்தவனே.
பார்வை ஸ்பரிசத்தால் என் மனதில்
உன் நினைவை கருக்கொள்ள செய்தவனே.


கட்டுக்கடங்காமல்
கொழுந்து விட்டு எரியும் உன்
காம வேள்விக்கு எனை அவிப்பொருளாய்
கொண்டவனே.


மார்கழி மாதத்தில்
மனங்குளிரும் நேரத்தில்
மயக்கங்கள் கொண்டே, கவி
புலம்பச்செய்தவனே.


மன்னவனே! நான்
சூடாத மாலைகளை
சூடுவதே இல்லையென
சூட்சமமாய் சொன்னபின்பு
சூடிக்கொண்டேன் உன்னையே
என் மனதோடு.

மயிலிறகு ஒன்று
மகுடமாய் கொண்டு
வேய்குழலால் எனை வென்று
மனதோடு நின்றாய் மாயவனே.

வீசும் காற்றில் குழல் ஊதிய உன்
சுவாசக்காற்றும் இருக்குமென என்
சிந்தையில் வைத்து
கரைந்து கொண்டே இருக்கிறேன் நான்.
நீ விரும்பும் பச்சை கற்பூரமாய்
நான் உன்
ஆண்டாள்.